செ.இளவேனில்
உயிர் வாழும் ஒவ்வொரு மனிதருக்கும் இன்றியமையாத தேவைகளை அளிக்க வேண்டியது ஒரு மக்கள்நல அரசின் கடமை. திமுக 1967 தேர்தலைச் சந்தித்தபோது தமிழ்நாடு கடும் உணவு நெருக்கடியைச் சந்தித்திருந்த நேரம். உணவுப் பஞ்சத்தைப் போக்குவதும் உணவு உற்பத்தியைப் பெருக்குவதும் அக்கட்சியின் முக்கியத் தேர்தல் உறுதிமொழிகளாக இருந்தன.
இந்தியாவுக்கே முன்னோடியாக, பொது விநியோகத் திட்டத்தை உருவாக்கியது கலைஞர் மு.கருணாநிதி ஆட்சிக் காலத்தின் முக்கியமானதொரு சாதனை. கூட்டுறவுச் சங்கங்களின் வாயிலாகவும் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் வாயிலாகவும் இத்திட்டத்தைச் செயல்படுத்தியது இன்னும் முக்கியமானது. தனியார்கள் இந்தத் திட்டத்திலிருந்து மிகுந்த கவனத்துடன் விலக்கிவைக்கப்பட்டனர். இந்திய அளவில் பசுமைப் புரட்சித் திட்டம் முன்னெடுக்கப்பட்டபோது அத்திட்டத்தால் பெரும் பயனடைந்த மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாக இருந்தது. இதில், நீர்ப் பாசனத் திட்டங்களை மேம்படுத்துவதில் மு.கருணாநிதி தலைமையிலான ஆட்சி முன்னெடுத்த முயற்சிகள் குறிப்பிடத்தக்கவை. உணவு உற்பத்தியைப் பெருக்கியதோடு அரசே நேரடியாகக் கொள்முதல் செய்து, கள்ளச் சந்தையின் கட்டற்ற வளர்ச்சியைத் தடுத்தாண்டது.
உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்ததைப் போலவே, கண்ணியமான உறைவிடங்களை உருவாக்குவதற்கும் மு.கருணாநிதி முன்னெடுத்த திட்டங்கள் முன்னோடியானவை. அவற்றில் ஒன்று, குடிசை மாற்று வாரியம். அவ்வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட இராம.அரங்கண்ணல் தன்னுடைய நினைவுகள் நூலில் இளம் வயதில் கருணாநிதியுடனான நினைவுகளையும் பகிர்ந்துள்ளார். தாழ்த்தப்பட்ட மக்கள் எவ்வளவு மோசமான குடியிருப்புகளில் வாழ்கிறார்கள் என்பதைக் குறித்து, தனது இளமைக் காலத்திலேயே வருந்தினார் கலைஞர் என்பது அந்நினைவுகளில் ஒன்று. ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபோது அவர் தன்னால் இயன்ற திட்டங்களைத் தீட்டி அக்கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்றார். கிராமப்புறங்களில் தாழ்த்தப்பட்ட குடியிருப்புகளில் கான்கிரீட் வீடுகள் திட்டம் தொடங்கி சாதி பேதமற்ற சமத்துவபுரம் திட்டம் வரையில் அந்தத் திட்டங்களை முன்னோக்கி நகர்த்தினார்.
வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தனி ஆர்வம் காட்டிய அவர் அதற்குத் தொழில் துறை வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்பதிலும் தனி அக்கறை செலுத்தினார். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட டிட்கோ நிறுவனத்தைப் போல 1971-இல் அவரால் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்) தொடங்கப்பட்டது. இந்நிறுவனம், தமிழ்நாடு அரசுக்கே முழுவதும் சொந்தமாக வரையறுக்கப்பட்டதொரு பொது நிறுவனம். இது தனியார் துறையில் நடுத்தர, பெரிய தொழில்கள் முன்னேறுவதற்கும் விரிவடைவதற்கும் மாநிலத்தில் உள்ள பகுதிகளை விரைந்து தொழில்மயமாக்குவதையும் குறிக்கோளாகக் கொண்டு இயங்கிவருகிறது.
சிட்கோ என்றழைக்கப்படும் தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் 1970-இல் தொடங்கப்பட்டு, 1971 முதல் பொதுத் துறை நிறுவனமாக இயங்கிவருகிறது. சின்னஞ்சிறு தொழில் துறைகளில் பரவலான, விரைவான வளர்ச்சி என்பது இந்நிறுவனத்தின் இலக்காகும். அரசு, தனியார், பொதுமக்கள் பங்கு என்ற கூட்டுத் துறை அடிப்படையில் (ஜாய்ண்ட் செக்டார்) புதிய தொழிற்சாலைகளைத் தொடங்குவதற்குத் தனி ஆர்வம் காட்டியவர் கலைஞர். அரசு 26%, தனியார் 24%, பொதுமக்கள் 49% என்ற வீதத்தில் தன்னுடைய 1969- 1976 ஆட்சிக் காலத்தில் அதைச் செயல்படுத்தினார்.
தொழில் வளர்ச்சிக்குத் தடையற்ற மின் விநியோகம் அத்தியாவசியமான ஒன்று. மின் உற்பத்தித் திட்டங்களிலும் அவரது ஆட்சிக் காலத்தில் சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுவந்தது. நெய்வேலியில் இரண்டாவது அனல் மின் திட்டமும் மேட்டூர், தூத்துக்குடி அனல் மின் திட்டங்களும் 1976 வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டவை. மின் உற்பத்தியை அதிகரித்த அதே நேரத்தில் சமூகத்தில் பின்தங்கிய பிரிவினரின் குடியிருப்புகளுக்கு மின்விளக்கு வசதி அளிப்பதிலும் கவனம்காட்டினார். 1967 வரையில் நான்காயிரம் காலனிகளுக்கு மின்விளக்கு வசதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்த ஐந்தாறு ஆண்டுகளில் புதிதாக இருபதாயிரம் மின்விளக்குகள் போடப்பட்டன. (சட்டமன்ற உரை 12.02.1973)
அரசுப் பணிகளில் பெண்களுக்கான இடஒதுக்கீடு, குடும்பச் சொத்தில் பெண்களுக்கான உரிமை ஆகியவற்றை நடைமுறைப்படுத்திய முன்னோடி மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. அதுபோலவே, காவல் துறைப் பணிகளில் பெண்கள் நியமிக்கப்பட்டதும் அவரது ஆட்சிக் காலத்தில்தான். குறிப்பாக, அவரால் நடைமுறைப்படுத்தப்பட்ட உள் இடஒதுக்கீடு முறையில் அருந்ததியர், இஸ்லாமியர் ஆகியோர் அரசு நிர்வாகத்தில் பங்கெடுக்கக் கிடைத்த வாய்ப்பு என்பது சமூக அளவில் ஒரு பெரும்புரட்சி என்றே சொல்ல வேண்டும். அதிலும் குறிப்பாக அப்பிரிவுகளைச் சேர்ந்த பெண்கள் இவ்வாய்ப்புகளைப் பெற்றுவருகிறார்கள்.
உலகமயத்தின் வருகைக்குப் பிறகு பொதுத் துறை, கலப்புப் பொருளாதாரம் என்ற பொருளாதாரக் கொள்கையெல்லாம் முடிவுக்கு வந்தன. அதன் பிறகு அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதன் வாயிலாக, புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்படுவதற்கும் புதிய வேலைவாய்ப்புகள் உருவாவதற்குமான முயற்சிகளை அவர் எடுத்தார். இந்தியாவிலேயே முதல் மாநிலமாகத் தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்பக் கொள்கையை வகுத்த அவர், சென்னையில் தகவல் தொழில்நுட்பப் பூங்காவைத் தொடங்கி வளர்ந்துவந்துகொண்டிருந்த அந்தப் புதிய துறையிலும் தமிழ்நாட்டு இளைஞர்கள் அளப்பரும் வாய்ப்புகளைப் பெறுவதற்கு அடித்தளம் அமைத்தார்.
இந்திய அரசமைப்பின்படி வரையறுக்கப்பட்ட மாநில உரிமைகள், கட்டுப்படுத்தப்பட்ட நிதி அதிகாரங்கள் இவற்றுக்கிடையில்தான் கல்வி, சுகாதாரம், உணவுப் பாதுகாப்பு, உறைவிடங்கள் மேம்பாடு, புதிய வேலைவாய்ப்புகள் என்று அவர் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இந்திய அரசமைப்பால் மாநில அரசுகளுக்கு இழைக்கப்படும் அதிகார முடக்கங்களுக்கு எதிராக முழங்கியபடியே அதே அரசமைப்பால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள சமூகநீதி, சம வாய்ப்பு, மதச்சார்பின்மை ஆகியவற்றைப் பாதுகாப்பதற்கும் அவர் எழுதவும் பேசவும் வேண்டியிருந்தன.
பள்ளி மாணவப் பருவத்திலேயே மொழியுரிமைப் போராட்டத்தில் பங்கெடுத்துக்கொண்ட மு.கருணாநிதி, தனது ஆட்சிக் காலத்தில் மொழி வளர்ச்சியில் தீவிரங்காட்டினார். அறிவாளர்களின் கருத்தரங்கக் கூடுகையாக இருந்த உலகத் தமிழ் மாநாட்டை, சென்னையில் மாபெரும் மக்கள் எழுச்சியமாக மாற்றிக்காட்டியதில் அவருக்குப் பெரும் பங்கு உண்டு. தமிழ்நாட்டில் அடுத்து நடத்தப்பட்ட உலகத் தமிழ் மாநாடுகளுக்கும் அது ஓர் உதாரணமாய் அமைந்தது. அரசமைப்பின்படி அட்டவணை மொழிகளில் ஒன்று என்ற நிலையைத் தாண்டி செம்மொழி என்ற அங்கீகாரத்தைத் தமிழ் பெற்றதிலும் அவருக்குப் பங்கு உண்டு. இலக்கியப் பழம்பெருமைகளைப் பேசுவதோடு நின்றுவிடாமல் கணினி யுகத்தில் தமிழ் பயணிக்க வேண்டிய பாதையைத் தீர்மானிப்பதிலும் அவர் பங்கெடுத்துக்கொண்டார்.
கணினித் தமிழ் மாநாட்டைக் கூட்டியதோடு, தமிழ் இணையக் கல்விக்கழகம் அமையவும் காரணமாக இருந்தார். இன்று உலகெங்கும் உள்ள தமிழர்களும் அல்லாதவர்களும் இணையம் வழி தமிழ் கற்கும் வாய்ப்பு இந்த நிறுவனத்தின் வாயிலாக உருவாகியிருக்கிறது. ஒரு லட்சம் மின்-நூல்களை நோக்கி அந்நிறுவனத்தின் மின்னூலகம் வளர்ந்துகொண்டுள்ளது. வகுப்புரிமை பேசும் அமைப்பாகத் தொடங்கி வளர்ந்த திராவிட இயக்கத்தை மொழியுரிமை பேசும் அமைப்பாகவும் அடையாளப்படுத்தியதிலும் அவருக்குப் பெரும் பங்கு உண்டு.
அனைத்திற்கும் மேலாய், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று பாடிய வள்ளுவருக்கு இந்தியத் துணைக்கண்டத்தின் தென்முனையில் அவர் நிறுவிய பிரம்மாண்ட சிலையானது தமிழர்களின் தனித்த அரசியல், சமூக வாழ்நெறியை உலகுக்கு எடுத்துச்சொல்லிவருகிறது.
ஒரு தனிநபராக, அவரது வாழ்வு ஓய்வற்ற உழைப்பின் உயர்வைச் சொல்லும் முன்னுதாரணம். ஒரு அரசியல் தலைவராக, தோல்விகளால் துவண்டுவிடாத நீண்ட நெடும் பயணத்துக்கு முன்னுதாரணம். அறுபதாண்டு கால சட்டமன்றப் பயணத்தில், ஐந்து முறை அவர் முதலமைச்சராகப் பொறுப்பு வகித்த காலகட்டங்கள், தமிழ்நாட்டின் வளர்ச்சியிலும் மேம்பாட்டிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்களுக்கு முன்னுதாரணம்.
கட்டுரையாளர்: கவிஞர், எழுத்தாளர்.
காக்கைச் சிறகினிலே, ஜூன் 2024